காந்தியின் கல்விக் கொள்கைகள்
காந்தியின் பல கொள்கைகள் இன்றும் சிலரால் பின்பற்றப்பட்டாலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து காந்திய கொள்கைகளை எதிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் காந்தியின் கல்விக் கொள்கைகளை நம் நாடு கண்டு கொள்ளாமல் விட்டது நமக்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் கூற வேண்டும். காந்தியின் ஆதார கல்விக் கொள்கை நம் மண்ணுக்காக சிந்தித்தது. நமக்கான தற்சார்பை வத்துகிறது. இந்திய முதல் பிரதமரான நேரு இக் கொள்கையை வளர்த்தெடுத்திருந்தால் இந்திய நாட்டு கல்வி முறை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும். ஆனால் நேரு அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆதாரக் கல்வி திட்டத்தை நழுவ விட்டார். கல்வி என்பது பாடநூல்கள் வாயிலாக பெறுவது என்கிற எண்ணம் பல பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்த சிந்தனையை காந்தி மறுதலித்தார். பாடநூல்கள் மூலமாகவே அனைத்தையும் கற்பித்து விடலாமெனில் ஆசிரியர்களின் சொற்களுக்கு மதிப்பற்று போய்விடும். பாட நூல்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் அவரது மாணவர்களிடத்தில் சுய சிந்தனை விதைக்க முடியாது என்றார். ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதனால் தான் வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கைக்கான மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்வி என்பதை காந்தி வலியுறுத்தினார். காந்திய கல்வியின் அடிப்படையே தனி மனிதர்களை சமுதாயத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதே ஆகும்.
காந்திய கல்வியின் கூறுகள்
காந்திய கல்வி ஆறு முதன்மை பகுதிகளைக் கொண்டது.
1. ஏழாண்டு ஆதாரக் கல்வி இலவசமாக அரசே தரத்தோடு வழங்க வேண்டும்.
2. ஆதார கல்வி ஆனது முழுக்க முழுக்க தாய் மொழி வழிக் கல்வியாக இருக்க வேண்டும்.
3. கைத்தொழில் மூலமும் ஆக்கப்பணி மூலமோ கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்.
4. பள்ளியின் சட்டதிட்டங்களில் இருந்து தாங்கள் கற்க வேண்டிய தொழில் உட்பட மாணவர்களே தீர்மானித்து சுய கட்டுப்பாட்டுடன் ஒரு சமூகமாக பள்ளியை வழி நடத்துவார்கள்.
5. தங்களது சூழலோடு பொருந்துகிற கல்வி
6. குடிமை பயிற்சி நாட்டின் உயர்ந்த லட்சியங்களாக காந்தி கருதிய மதச்சார்பின்மை, வாய்மை, நேர்மை, பொதுவாழ்வியல், சமுதாய பங்கேற்பு அகிம்சை வழியில் உரிமைகளை பெறும் வழிகளை அறிதல் என அவரது கல்வி விரிவடைகிறது.
இவை அனைத்துமே இன்றைக்கு சமூகத்திற்கு பயன் உள்ளவையாக தேவைப்படுவனாக உள்ளன என்பது வியப்பளிக்கும் உண்மை. இவற்றையெல்லாம் கொள்கை அளவில் மட்டும் கூறிவிட்டு விடாமல் நடைமுறைப்படுத்தி சோதித்தும் பார்த்தார் காந்தி காந்தியின் கல்வி சோதனைகள் காந்தியின் முதல் கல்வி சோதனை தென் ஆப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் இருந்து 1915 இல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்திய கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன் விளைவாக புதிய கல்வி திட்டத்தை உருவாக்கினார் அதன்படி 1917 இல் அஹமதாபாத்தில் தன்னுடைய அடிப்படை கல்வி மற்றும் புதிய கல்வி என்னும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளை தொடங்கினார். இதேபோன்று 1921 இல் குஜராத் வித்யாபீடம் என்ற பல்கலைக்கழகத்தினை நிறுவினார். விடுதலைப் போராட்டம் தீவிரமான காலத்தில் சேவா கிராமத்தில் வாழ்ந்த போது ஹரிஜன் இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் பலவீனங்களை பின்வருமாறு பட்டியலிட்டு இருந்தார்.
1. நமது மரபுக்கும் பண்பாட்டுக்கும் முரண்பட்டதாக இருந் மெக்காலே குமாஸ்தா கல்வி உள்ளது.
2. இந்தக் கல்வி குழந்தையை நேரடியான சமுதாய சூழ்நிலையிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் பிரித்து விடுகிறது.
3. கற்றவர்களை தனி இனமாக பிரிவாக இன்றைய கல்வி உருவாக்கி விட்டது.
4. அரசு மற்றும் தனியாருக்குப் பணியாளர்களாக மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி மட்டுமே இன்றைய கல்வி வழங்குகிறது.
5. மாணவர்களின் மனதில் சமுதாய உணர்வின்றி சுயநல தனிமனித உணர்வு புகுந்து விட்டது.
6. ஒரு நூற்றாண்டாக தொடரும் இந்த அந்நியர் கல்வியில் தொடக்கப்பள்ளி என்பது எந்த முன்னேற்றமும் இன்றி வதங்கி விட்டது.
7. கல்வி திட்டத்தின் பெரும் பகுதி வாழ்க்கைக்கு பயன்படுததாக வீணானதாக உள்ளது
8. பொதுமக்கள் கல்வி முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி எண்ணிப் பார்ப்பதே கிடையாது.
9. இயந்திர முறையில் ஒரே மாதிரியான கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் அவரவர் தேவை உணராமல் வழங்குகிறார்கள்,
10. கல்வி முறையும் தேர்வுகளும் கல்வியை மாணவர்களின் உள்ளத்தில் பயத்தை உருவாக்கி பெரிய சுமையாகவே மாற்றி விடுகிறது.
என்று இந்திய கல்வி குறித்து கடுமையான அதே நேரத்தில் உண்மையான குற்றச்சாட்டுகளை அக்கட்டுரை முன்வைத்தது, பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்திய தேசிய கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் உசேன் தலைமையில் இந்திய கல்வி குறித்து முடிவு செய்
ய ஒரு குழுமம் அமைக்கப்பட்டது. வார்த்தா கல்வி திட்டம் அல்லது ஆதார கல்வி கொள்கை அந்த கல்வி குழுவால் முன்மொழியப்பட்டது. பிறகு சர்வோதய மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டன.

0 Comments