பயனளவைக் கொள்கையும் கல்விக்கொள்கைகளும்




பயனளவைக் கொள்கையும் கல்விக்கொள்கைகளும் 

இருபதாம் நூற்றாண்டில் கல்வியுலகில் புதுமைகளைப் புகுத்திய கல்வியலாளர்களுள் ஜோன்டூயி சிறப்பானவர். இவர் ஐக்கிய அமெரிக்க நாட்டின் பிரிஸ்டனில் 1859 ஆம் ஆண்டு பிறந்தவர். ஜனநாயக ஆட்சியில் சுதந்திரமும் ஆர்வமும் இருப்பதனை உணர்ந்து முற்போக்கு கல்வியின் அவசியத்தை இவர் எடுத்துரைத்தார். இவரது முற்போக்கு கல்வித் திட்டமானது செயல்முறை கல்விக்கு வித்திட்டது. சிறந்த நூலாசிரியரான இவர் ஒரு தத்துவப் பேராசிரியராக பெற்ற அனுபவங்களைக் கொண்டு பல்வேறு ஆய்வு கட்டுரைகளை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் கருத்துப்படி கல்வியானது உளவியல் சார்ந்ததாகவும் சமூகம் சார்ந்ததாகவும் காணப்பட்டது. கல்வியானது நிகழ்கால வாழ்க்கைக்குரித்தானது. எதிர்கால வாழ்க்கைக்கான தயார்படுத்தல் அல்ல என்பது இவரது சிந்தனையாகும். கல்வி என்பது வாழ்க்கை அனுபவம் அனுபவமே கல்வி என்பது இவரது தத்துவம் ஆகும் (மனோகரன், 2019).

மாற்றம் வளர்ச்சி முன்னேற்றம் இம்மூன்றுமே வாழ்க்கையின் குறிக்கோள் என்பது பயனளவைக் கொள்கையாகும். வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் முறையே ஏற்புடையது என்பது இக்கொள்கையின் சிறப்பாகும். எப்பிரச்சினைக்கும் கருதுகோள்களை அமைத்தல் விஞ்ஞானமுறையில் பரிசோதித்தல், மற்றும் பிறகு உண்மைகளைக் கண்டு மதிப்பிடுதல் என விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து காரண காரியத்துடன் தீர்வளிக்கும் முறையையே வலியுறுத்துகிறது பயனளவைக் கொள்கை. மேலும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரே கல்விக் கொள்கையை கடைபிடிக்க முடியாதென்றும் காலத்தின் தேவைக்கேற்ப கல்விக் கொள்கைகள் மாற வேண்டும் என்பதையும் இக்கொள்ளையானது வலியுறுத்துகிறது. அனைத்து விதிகளும் காலத்தாலும் இடைவெளியாலும் தீர்மானிக்கப்பட்டவையன்றி சுயாதீனமானவை அல்ல. மனித முயற்சிகளுக்கு இக்கோட்பாட்டில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் இவர்களால் பன்மைநோக்கு வலியுறுத்தப்படுகிறது. மனித விழுமியங்கள் நித்தியமற்றவை என்றும் கால விசைகளுக்கு ஏற்ப மாறுபாடு கொள்பவை என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்களது அணுகுமுறையில் வழிமுறைகளுக்கும் செயல்வினைப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

செயற்திட்ட முறையை (project method) முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் இவராவார். கற்றல் என்பது செயலுடன் கூடியது. இவரது கருத்துப்படி பிள்ளைகளிடம் ஆராய்வூக்கம், படைப்பூக்கம், சுயவெளிப்பாடு, சமூக உறவு என்பன வெளிப்படும் வகையில் கற்றல் செயல்பாடுகள் அமைய வேண்டும். இதற்கமையவே இவர் கற்றலில் செயற்திட்ட முறையை அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரச்சினை தீர்த்ததலுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றது.

உள்ளம் சிந்தனையில் ஈடுபட ஏதேனும் ஒரு பிரச்சனை தேவை. உள்ளம் அப்பிரச்சினையையிட்டு சிந்திக்கிறது. பிள்ளை பள்ளியில் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபட அதன் உந்துதல் தான் காரணமாகின்றன. பிள்ளை சிந்தித்து சாத்தியமான தீர்வுகளை கண்டறிகிறது. சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க பார்க்கும் போது செயல்திட்ட முறை உருவாகின்றது. அதன்படிகளாவன

1. யதார்த்தமான வாழ்க்கை பிரச்சினை நிலையை உருவாக்க 

2. பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வுகளை சிந்தித்தல் 

3. இவை பற்றிய தகவல்களை சேகரித்தல் 

4. ஆராய்ந்து சரியான தீர்வை கண்டறிதல் 

5. தீர்வை பயன்படுத்தல்

இம்முறை கல்வியில் ஜனநாயகபாங்கானது, ஒத்துழைப்பு நாடுவது, சுயமுயற்சிக்கு ஒத்துழைப்பது, செயற்பாடு பாடங்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது வாழ்க்கை பிரச்சனைகளை மையமாகக் கொண்டது. இச்செயற்பாடு பிள்ளைக்கு கவர்ச்சிகரமாக அமைகிறது. 


Post a Comment

0 Comments