இயற்கைவாதமும் கல்விக்கொள்கைகளும்






இயற்கைவாதமும் கல்விக்கொள்கைகளும் 

அரசியல் சிந்தனை வரலாற்றிலாயினும் சரி கல்வி சிந்தனை வரலாற்றிலாயினும் சரி ஜூன் ஜேக்; ரூசோ (1712 – 1778) ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் உலகுக்கு அறிமுகமாகியுள்ளார். கல்வியில் குழந்தை பெற வேண்டிய முக்கியத்துவத்தை இதுவரை எழுந்து எக்கல்வி கோட்பாடும் எடுத்துக் கூறவில்லை. இயற்கைவாதம் தகுந்த முறையிற் கல்வியிற் குழந்தை பெறும் சிறப்பிடத்தை விதந்துரைக்கிறது. குழந்தைகள் சிந்தனையின் அம்சம். குழந்தைகள் தாங்களே சிந்தித்து அறிவினை வளம் பெற வைத்தல் வேண்டும். குழந்தைக்குச் சிந்திக்க வழி வகுத்து கொடுத்தால் அதுவே பண்பு பெறும் கல்விக்கு வழிகோலும், என்பது ரூசோவின் கருத்தாகும் (சந்திரசேகரம், 2011). 

பண்டையக்கால கல்வியில் பாடங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அதாவது போதனை பாடத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. இதைப் பாடமையக் கல்வி எனலாம். அடுத்து முக்கியத்துவம் பெற்றவர் ஆசிரியர் ஆவார். இதை ஆசிரிய மையக் கல்வி எனலாம். மூன்றாம் இடத்தையே மாணவன் பெற்றான். பாடத்துக்காக மாணவன், ஆசிரியருக்காக மாணவன் என்ற நிலை மாறி மாணவனுக்காகவே ஆசிரியரும் பாடமும் என்ற நிலையை ரூசோவின் கல்வி தத்துவங்கள் தோற்றுவித்தன. அதாவது பிள்ளை மையக் கல்விக்கு வித்திட்டவரே ரூசோ ஆகும் (யோகராஜா னெ).

ரூசோ வாழ்ந்த காலம், சூழல், வேறுபாடு உடைய வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உத்வேகமும் உணர்ச்சியும் உள்ள அவரது இயல்புகள் ஆகியன அவரின் தத்துவ கருத்துக்களில் செல்வாக்கு செலுத்தியது எனலாம். ரூசோவின் இயற்கை வாதத்தில் இயற்கையே மையமாக அமைவதை காணலாம். இயற்கை நிலை, இயற்கை மனிதன் இயற்கை நாகரிகம் என்பன அவை ஆகும். இயற்கையிலிருந்து நீங்குதலே நாகரிகத்தின் சகல தீமைக்கும் காரணமென அவர் கருதினார். இயற்கை அன்னையின் கையில் இருந்து வரும் அனைத்தும் நன்மையானவைகளே மனிதனின் கைப்பட்டே அவை அனைத்தும் தூய்மை இழக்கின்றன. இயற்கையுடன் தோன்றிய வாழ்க்கையே உண்மையானது.

ஒழுங்கு முறையாக தாபிக்கப்பட்ட அமைப்புகளின் மீதும் பாட நூல்களின் மீதும் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அச்சமூகத்திற்கு எதிராகவே அவரது கல்விக் கொள்கை காணப்பட்டது. எனவே அவரது கல்வி அணுகுமுறையை எதிர்மறை கல்வி எனக் குறிப்பிட்டர். எதிர்மறை கல்வியின் நோக்கமானது பிள்ளையின் உள்ளத்தை சமூகத்தின் தீய நெறிகளில் இருந்து பாதுகாப்பது ஆகும். மேலும் இவ் எதிர்மறை கல்வி அணுகுமுறையில் இருந்து தாம் துணியக்கூடியது இயற்கைவழி கல்வியே  மனித குலத்திற்கு உகந்ததாகும். இங்கே பிள்ளையே இயற்கையின் மையமும் கல்வியின் மையமும் ஆகும். பிள்ளைக்கு இயற்கையான சுதந்திரம் வேண்டும் என குறிப்பிடுவதோடு, பிள்ளையானது பின்வரும் வழிகளிருந்து கல்வியை பெற்றுக்கொள்கிறது என ரூசோ குறிப்பிடுகிறார்.

1. குழந்தை மற்றும் சிறுபிள்ளை பருவங்களில், பிள்ளை இயற்கை சூழலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

2. சூழலுக்கு ஏற்றவாறு கல்வி பெற்றுக்கொண்டதை தொடர்ந்து மனிதர்களிடமும் ஆசிரியர்களிடமும் கல்வி பெறவேண்டும்.

3. மூன்றாவதாக பண்டங்களையும் பொருட்களையும் பயன்படுத்தி கல்வி பெறவேண்டும்.

அடுத்ததாக ஆசிரியர் தொடர்பாக ரூசோவின் கருத்தானது “ஆசிரியர்கள் ஞானவிளக்குகள்” என்ற சோக்ரட்டீசின் கல்வியில் பயன்பாட்டுவாதத்தின் கருத்தை தழுவியதாக காணப்பட்டது. ஆசிரியர்கள் போதனையிலும் சாதனையிலும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என குறிப்பிடுவதோடு ஆசிரியரானவர் பின்வரும் பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என குறிப்பிடுகிறார்.

1. நிறைந்த ஞானமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

2. சமூக ஊழல்களை அகற்றுபவராக இருத்தல் வேண்டும்.

3. மனிதனின் கடமைகள் என்ன என்பது பற்றிய தெளிவான அறிவை அவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

4. குழந்தைகளைச் சிறந்தவர்களாக உருவாக்குகின்றவர்கள் அவர்களாகையால், குழந்தைகள் இழைக்கும் தவறுகளால் ஏற்படும் விளைவுகளை தாமே பொறுப்பேற்கும் தன்மையுனையவர்களாக ஆசிரியர் காணப்படல்.

5. ஆசிரியரானவர் போதித்தல், வினாவுதல், விளக்குதல், செய்துகாட்டல், மற்றும் பரீட்சித்தல் முதலியவற்றில் சிறந்து விளங்குதல் வேண்டும்.


Post a Comment

0 Comments